குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்
ICCPR உறுப்புரைகளின் மீறல் ஏற்றுக்கொள்ளப்பட்டது
பொருத்தமானதல்ல
CCPR/C/123/D/2807/2016
2011 இல், குறித்த முறைப்பாட்டாளர் நிகாப் அணிந்திருந்தபோது அடையாளச் சோதனைக்காக நிறுத்தப்பட்டார். பொது இடத்தில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்த சிறு குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
உடன்படிக்கையின் 18 வது பிரிவின் அடிப்படையில், பொது இடங்களில் முகத்தை மறைப்பதற்கான தடையானது, முழு முகத்திரையை அணிய விரும்பும் பெண்களுக்கு அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பை இழக்கச் செய்கின்றது என்று முறைப்பாட்டாளர் கூறினார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
(1) குழு அதன் பொதுக் கருத்துரை எண். 22 ஐ நினைவு கூர்ந்தது. அதன் படி: “மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் சுதந்திரம் ‘தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் இணைந்து சமூகமாகவோ மற்றும் பொது அல்லது தனிப்பட்ட முறையில்’ பயன்படுத்தப்படலாம். இதில் மதம் அல்லது நம்பிக்கையினை கடைபிடித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலில், சடங்குகள் மட்டுமின்றி… தனித்துவமான ஆடைகள் அல்லது தலையை மூடுவது போன்ற பழக்கவழக்கங்களும் அடங்கும். முறைப்பாட்டாளரால் வலியுறுத்தப்பட்டதன்படி, முழு முகத்திரை அணிவது இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவினரின் வழக்கமாக உள்ளது என்பதுடன் அது மத நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்பதில் சர்ச்சை எதுவும் இல்லை. பொது இடத்தில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிவதைத் தடைசெய்யும் 2010-1192 ஆம் இலக்க சட்டமானது, நிகாப் அணிந்திருந்த முறைப்பாட்டாளருக்கும் ஏற்பாகும் என்பதுடன் இச்சட்டத்தினூடாக அவர் தனது மத பாரம்பரியங்களுக்கு அமைய உடை அணிவதனை கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார் அல்லது அவ்வாறு அணியின் தண்டனையினை எதிர்கொள்வார் என்ற விடயமும் சர்ச்சைகளின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதன்படி, குறித்த சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தடையானது, நிகாப் அணிவதன் மூலம் தனது மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் உறுப்புரையின்
18(1) வது பிரிவின் கீழான முறைப்பாட்டாளரின் உரிமையை மட்டுப்படுத்துகிறது அல்லது வரம்புக்குட்படுத்துகிறது என்று குழு கருதுகிறது.
(2)மேலும், உறுப்புரை 18(3) ஆனது கடினமான முறையில் பொருட்கோடல் செய்யப்பட வேண்டும் என குழு கருதுகிறது: இங்கு குறிப்பிடப்படாத காரணங்களின் அடிப்படையில் மட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படாது, அவை உடன்படிக்கையில் பாதுகாக்கப்பட்ட பிற உரிமைகளுக்கான மட்டுப்பாடுகளாக அமையினும் இவ் உறுப்புரையில் கூறப்படாதவிடத்து அவை இதற்கான மட்டுப்பாடுகளாக அனுமதிக்கப்படாது. எடுத்துக்காட்டாக, தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் மட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படாது. மட்டுப்பாடுகள் அவை பரிந்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படலாம் என்பதுடன் அவை நேரடியாக தொடர்புடையதாகவும், அவை முன்னறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட தேவைக்கு வகிதசமனாகவும் இருக்க வேண்டும். பாரபட்சமான நோக்கங்களுக்காக மட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடாது அல்லது அவை பாரபட்சமான முறையில் பயன்படுத்தப்படக்கூடாது.
(3) உறுப்புரை 18(3) இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகள் கடினமாகப் பொருட்கோடல் செய்யப்பட வேண்டும் என்பதுடன் சுருக்கமான முறையில் பயன்படுத்தப்படக் கூடாது. உடலை முழுதாக மறைக்கின்ற பெண்கள் உள்ளடங்கலாக முகத்தை மூடியுள்ள நபர்கள் பொது இடங்களில் இருப்பதனால் எவ்வாறு ஏனையோரின் ஏதேனும் அடிப்படை உரிமைகள் அல்லது சுதந்திரங்கள் பாதிப்பிற்குள்ளாகும் என அரச தரப்பு அடையாளப்படுத்தவில்லை. அத்துடன், சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்டிருக்கும் ஏனைய பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது இடங்களில் முகத்தை மூடுதல் ஏனையவர்களின் ஏதேனும் உரிமையினை மீறாதவிடத்து, குறிப்பாக, பெண்கள் முழுமுகத் திரையினை ஆடையாக அணிகின்றமை மாத்திரம் எவ்வாறு ஏனையவர்களின் ஏதேனும் உரிமைகளை மீறும் என்பதனை அரச தரப்பு விளக்கத் தவறியுள்ளது. பொது இடத்திலுள்ள எந்தவொரு நபருடனும் ஊடாடல் செய்தல் மற்றும் நபரொருவர் முகத்திரை அணிந்துள்ளார் என்ற நிகழ்வினால் இடையூறுக்கு ஆளாகாமல் இருக்கின்ற உரிமை என்பன உடன்பாட்டினால் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் அல்ல. ஆகவே, அவை உறுப்புரை 18 (3) இன் படி மட்டுப்பாடுகளுக்கான அடிப்படைகளாக முடியாது.
(4) நிகாப் அணிவதன் மூலம் தனது மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான முறைப்பாட்டாளரின் சுதந்திரத்தினை மட்டுப்படுத்தல் அவசியமானதுடன், உடன்படிக்கையின் 18(3) இல் சொல்லப்பட்டுள்ளதற்கிணங்க விகிதசமமானது என்பதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என்று குழு குறிப்பிட்டது. அதன்படி, 2010-1192 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தடை மற்றும் நிகாப் அணிந்ததற்காக குறித்த சட்டத்தின் கீழ் முறைப்பாட்டாளருக்கு வழங்கபட்ட தண்டனை என்பன உடன்படிக்கையின் 18 வது பிரிவின் கீழ் அவரது உரிமைகளை மீறியுள்ளன என்று குழு முடிவு செய்கிறது.