UKHL 15 (2005)
அனைத்து பாடசாலைகளிலும் உடல் ரீதியானத் தண்டனையினை வழங்குவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள பூரணத் தடையானது மனித உரிமைகள் மீதான சமவாயத்தின் உறுப்புரை 9 இன் கீழ் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் மத சுதந்திரம் மற்றும் மதத்தை நடைமுறையில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுடன் முரண்படுவதாக வாதிகள் வாதிட்டனர்.
திருவிவிலியத்தில் உள்ள சில வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடல்ரீதியானத் தண்டனைகளை வழங்க உரித்துடையவர்கள் என்ற நம்பிக்கையினைக் கொண்டிருந்தனர். “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்”- நீதிமொழிகள் 13:24)
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்.
மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
(1) “…நடைமுறையில் இந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்துவது பிள்ளைகளின் சிறப்பு நலனுக்கு உகந்ததாக இல்லை.”
(2) “எனவே, ஒவ்வொருவரும் அவர் விரும்பும் எந்த நம்பிக்கையையும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. ஆனால், “வெளிப்படுத்தல்” பற்றிய கேள்விகள் எழும் போது, வழக்கமாக இந்த வகையான விடயத்தில் செய்வது போல், ஒரு நம்பிக்கை சில குறைந்தபட்ச புறவயத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இத்தேவைப்பாடுகளுக்கான அளவுகோல்கள் ஐரோப்பிய சமவாயத்தின் உறுப்புரை 9 இல் உட்கிடையாகக் கூறப்பட்டுள்ளன என்பதுடன் ஏனைய மனித உரிமை ஆவணங்களிலும் அதனையொத்த தேவைப்பாடுகளே காணப்படுகின்றன. அதாவது நம்பிக்கையானது மனித கௌரவத்திற்கான அடிப்படை நியமங்களுடன் ஒத்துபோவதாக அமைய வேண்டும். உதாரணமாக, ஏனையவர்களை சித்திரவதைக்கு அல்லது மனிதாபிமானமற்ற தண்டனைக்கு ஆளாக்குகின்ற மத நம்பிக்கையொன்றின் வெளிப்படுத்தலானது பாதுகாப்பினைப் பெற முடியாது. நம்பிக்கையானது வெறுமனே பயனற்ற எண்ணங்களைத் தாண்டி அதற்கப்பாற்பட்ட விடயங்களுடன் தொடர்புறுவதாக இருக்க வேண்டும். அது குறித்த அளவிலான தீவிரம் மற்றும் முக்கியத் தன்மையினைக் கொண்டிருக்க வேண்டும். சொல்லப்பட்டதற்கிணங்க அவ் நம்பிக்கையானது அடிப்படை பிரச்சினையொன்றின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும். மத நம்பிக்கைகள் தொடர்பாக இத்தேவைப்பாடு அநேகமாகத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்யப்படும். நம்பிக்கையானது புரிந்து கொள்ளக் கூடியதாகவும் நிலையானதாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், இது தொடர்பாக அதிகளவான தேவைப்பாடுகளையும் முன் வைக்கக்கூடாது. மதம் இயற்கையாகவே நம்பிக்கைகளைக் கொண்டது. அந்நம்பிக்கைகள் குறித்த தெளிவான விளக்கங்களை அல்லது தர்க்க நியாயங்களை வழங்குதல் எப்போதும் இலகுவானதல்ல. பயன்படுத்தப்பட்டுள்ள மொழிப்
பிரயோகங்களும் அடையாளமொழியாக அல்லது உவமைகள் அல்லது உருவகங்களாகவே காணப்படுகின்றன. விடயப்பொருளின் தன்மையின் அடிப்படையில், தனிநபர்கள் எப்போதும் அவர்களின் நம்பிக்கைகளை துல்லியமாக அல்லது தெளிவாக விளக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. அத்துடன் தனிநபர்களின் நம்பிக்கைகள் எக்காலத்திலும் ஒரேமாதிரியாக நிலைத்திருப்பவை அல்ல. ஒவ்வொரு தனிநபரினதும் நம்பிக்கைகள் அவருடைய வாழ்நாளில் மாற்றங்களுக்கு உட்படக்கூடியது. ஒட்டுமொத்தத்தில் இத்தேவைப்பாடுகள் சிறுபான்மை சமூகங்கள் இச்சமவாயத்தின்கீழ் பாதுகாத்து கொள்ள எண்ணுகின்ற அவர்களின் நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட கூடாது. பார்க்க: Arden LJ [2003] QB 1300, 1371, para 258′.
(3) “உரிமைகோருபவர்களின் நம்பிக்கைகள் மனித கௌரவத்தின் இன்றைய நியமங்களுடன் ஒத்துப்போகின்றனவா என்பது மிகவும் கடினமான கேள்வி. உடல்ரீதியானத் தண்டனையானது இந்நியமங்களுடன் முரண்படுகின்ற வகையில் பிள்ளைகளுக்கு
வழங்கப்பட முடியும் என்பது தெளிவான விடயம். அத்தகைய தன்மையினை உடைய உடல்ரீதியானத் தண்டனையினை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையானது உறுப்புரை 9 இன்கீழ் பாதுகாக்கப்பட மாட்டாது. ஆனால், அத்தகைய பாரதூர தன்மையுடன் உடல்ரீதியானத் தண்டனையினை வழங்கத் தேவையில்லை அல்லது அத்தகைய சூழ்நிலைகளில் அது பிள்ளையின் உடல்சார் அல்லது நெறிசார் கௌரவத்தினை கணிசமாகப் பாதிக்கும்.”
(4) “மதத்தை வெளிப்படுத்துவதற்கான வாதிகளின் சுதந்திரத்தினை மீறுவதாகச் சொல்லப்படுகின்ற பிரிவு 548 ஆனது, குறித்த மட்டுப்பாடு அல்லது தலையீடு சட்டத்தால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற அளவுகோலை பூர்த்தி செய்கின்றது. தடையானது தெளிவான விதிமுறைகளில் முதன்மைச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தலையீடு, உறுப்புரை 9 இன் அர்த்தத்தில், “ஜனநாயக சமூகத்தில்… மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கு அவசியம்” என்பதில் சந்தேகமில்லை. சட்டப்பூர்வ தடையானது ஒரு நியாயமான நோக்கத்தைக் கொண்டுள்ளது: பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடியவர்கள், மேலும் சட்டத்தின் நோக்கம் அவர்களைப் பாதுகாத்து அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதாகும். உடல் ரீதியான தண்டனை என்பது வேண்டுமென்றே உடல் ரீதியான வன்முறையை ஏற்படுத்துவதாகும். இந்தச் சட்டம் உடல் ரீதியான வன்முறையை ஏற்படுத்தக்கூடிய துன்பம், வலி மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உடல் ரீதியான தண்டனை தீங்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.