அக்டோபர் 4, 2022

சமாதானத்தைப் பேணுவோம்: Faril  வழக்கு பற்றிய ஓர் கற்கை 

M.J.M Faril et al v. Bandaragama Pradeshiya Sabha et al என்ற வழக்கானது இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பான சட்டங்கள் தொடர்பாக, குறிப்பாக சிறுபான்மைக் குழுக்கள் தொடர்பில், முக்கியத்துவம் பெறுகின்றது. 

இவ்வழக்கானது பானதுரையில் அமைந்துள்ள வாகத ஜும்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் சபையின் தலைவர் மற்றும் அனாஸ் இப்னு மலிக் ஹிபுல் குர்ஆன் மத்ராஸாவின் (தம்ம பாடசாலை) அதிபர் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது. முரண்பாட்டிற்குரிய விடயமாக அமைந்தது அப்பிரதேசத்தில் இடம்பெற்றக் கட்டிடக் கட்டுமானமொன்றாகும். பதிவு செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் விண்ணப்பத்தில், மனுதாரர்களினால் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணியினை இடைநிறுத்தியமையானது அரசியலமைப்பின் உறுப்புரை 10, 12(1), 12(2) மற்றும் 14(1)(உ) என்பனவற்றை மீறியுள்ளது என முறையிடப்பட்டிருந்தது.  பௌத்த பிக்குகளும் பிரதேசவாசிகளும் மனுதாரர்களினால் கட்டிடமொன்று கட்டுமானம் செய்யப்பட்டமைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மனுதாரர்கள் அப்பிரதேசத்தில் பாடசாலையொன்றினைக் கட்டுவதற்கு மாத்திரமே அனுமதி பெற்றிருந்தனர் என்றும், ஆனால் அவர்கள் உண்மையில் பள்ளிவாசலொன்றைக் கட்டுவதாகவும் போராட்டக்காரர்கள் கூறினார்கள். உச்சநீதிமன்றமானது விண்ணப்ப மனுவினை நிராகரித்ததுடன் குறித்த கட்டுமானத்தை இடைநிறுத்துவதற்கானத் தீர்மானத்தினை நிலைநிறுத்தியது. 

Faril வழக்கானது பகிரங்கச் சட்டத்தில், மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பான முக்கியமான சான்றுப் போக்கினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

இலங்கையின் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பான சட்டவியலானது, சமூத்தில் ‘சமாதானத்தினை’ பேணுகின்ற முயற்சியில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்துடன் தொடர்புடைய உரிமைகள்- குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகள் சமரசம் செய்யப்படுகின்ற தெளிவான போக்கினை வெளிப்படுத்துகின்றது. Faril வழக்கு இதற்கான சிறந்த உதாராணமாகும். இவ்வழக்கில் நீதிமன்றம் பின்வருமாறு கூறியது: 

‘கிராமத்தவர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பௌத்த பிக்குகள் வேறுபட்ட நோக்கமொன்றிற்காக செய்யப்படுகின்ற மேலதிகக் கட்டுமானத்திற்கு எதிராகக் கடுமையாக போராட்டம் செய்துள்ளனர். எங்களுடைய நாடு வருடக்கணக்கில் இடம்பெற்ற வகுப்புவாத வன்முறைகளின் விளைவாகப் பாதிப்படைந்துள்ளது. வரலாறு மீண்டும் மீண்டும் இடம்பெறுவதுடன் 1915 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளில் என்ன இடம்பெற்றது என்பது தொடர்பில் ஒருவர் பகுப்பாய்வு செய்வாராயின், இரண்டு சமுதாயங்கள் முரண்பட்டுக் கொள்வதற்கு எவ்வித அர்த்தமும் காணப்படவில்லையாயினும், சமுதாயத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் பாடங்கள் கற்றுக் கொள்ளப்படவில்லை. அந்நேரத்தில் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் விளைவாக பெறுமதிமிக்க உயிர்களும் ஆதனங்களும் அழிவடைந்தன. இத்தகைய சம்பவங்கள் எமது நாட்டில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளன. ஆகவே, இதற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவேண்டியவர்கள்  சமாதான குலைவினைத் தவிர்ப்பதற்கான மற்றும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’

மேலும் நீதிமன்றம் பின்வருமாறு கூறியது:

‘எமது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடிய நெருக்கடிமிக்க சூழ்நிலையொன்றினைத் தவிர்ப்பதற்கு அவசியமான காரியங்கள் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள வழக்கு சந்தர்ப்பங்களின்படி பிரதிவாதிகளினால் வேறு மேலதிகக் காரணங்கள் சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை.’

சட்டத்தின் சமமான பாதுகாப்பு மனுதாரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்ற தீர்விற்கு தம்மால் வரமுடியாதென நீதிமன்றம் கூறியது. 

அத்துடன் தம்ம பாடசாலையொன்றினைக் கட்டுகின்ற எந்தவொரு நபரும் மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேவைப்படுத்துகின்ற சுற்றுநிரூபத்தின் பிரயோகப்பாட்டினையும் நிலைநிறுத்தியது: 

3ஆம் பிரதிவாதி, P14 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிதத்தினூடாக, 1ம் மனுதாரர் மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளவில்லையென்கிற காரணத்தினால் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியினை நிறுத்துமாறு பணித்தார். P14 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிதத்தில் 3ஆம் பிரதிவாதி MBRA/2-SAD/10/Con.Gen/2013 என்ற சுற்றுநிரூபத்தினை மேற்கோள் காட்டியிருந்தார். 3ஆம் பிரதிவாதி இச்சுற்றுநிரூபத்தினை 3A R4 (ந) என அடையாளப்படுத்தி சமர்ப்பித்திருந்தார். இச்சுற்றுநிரூபத்தின்படி, தம்ம பாடசாலையினைக் கட்டுகின்ற எந்தவொரு நபரும் மத விவகாரங்களுக்கான அமைச்சிடமிருந்து அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மனுதாரர்கள் மத விவகாரங்களுக்கான அமைச்சிடமிருந்து அனுமதியினைப் பெற்றிருக்கவில்லை. மனுதாரருக்கான கற்றறிந்த ஜனாதிபதி சட்டத்தரணி இச்சுற்றுநிரூபமானது சட்டத்திற்கான பொருட்கோடலிற்குள் உள்ளடங்காது என வாதிட்டார். நான் இப்போது இது தொடர்பாக குறிப்பிடுகிறேன். 

அரசியலமைப்பின் உறுப்புரை 12 இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘சட்டம்’ என்பது பகிரங்க அதிகார சபைகளின் நடத்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள், விதிகள், பணிப்புக்கள், கோட்பாடுகள், வழிகாட்டிகள் மற்றும் திட்டங்கள் என்பனவற்றை உள்ளடக்கும். இத்தகைய பின்னணியில், உறுப்புரை 12 ஆனது வெறுமனே தனிப்பட்ட நடத்தைக்கெதிராக எவ்வித பாதுகாப்பு அரண்களையும் எழுப்பாத அதேவேளை, பகிரங்க அதிகார சபைகள் அரசியலமைப்பு தேவைப்பாடுகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும், குறிப்பாக, உறுப்புரை 12 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும்- இது ஒப்பந்தப் பரப்பிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதுடன் ஒரே நிகழ்வுகளினால் அல்லது சந்தர்ப்பங்களினால் ஒப்பந்த மீறல் மற்றும் உறுப்புரை 12 இன் மீறல் ஆகியன விளைவுகளாகின்றபோது, பாதிக்கப்பட்ட தரப்பானது அவரது நிவாரணத்தினை ஒப்பந்தச் சட்டத்தின்கீழ் உள்ளடக்க முடியாது. 

மேற்குறிப்பிடப்பட்ட தீர்ப்பினைக் கருத்திற்கொண்டு பார்க்கின்றபோது என்னால் மேலுள்ள வாதத்துடன் இணங்க முடியவில்லை. ஆகவே, அதனை நான் நிராகரிக்கிறேன். மனுதாரர்கள் மத விவகாரங்களுக்கான அமைச்சிடமிருந்து அனுமதியினைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதனால், P14 இல் 3ஆம் பிரதிவாதி கொண்டுள்ள நிலைப்பாடு சரியானது. ஆகவே, P14 வலிதற்றது மற்றும் வெறிதானது என பிரகடனப்படுத்தக் கோருகின்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும். 

ஏனைய பல வழக்குகளைப் போன்று, இவ்வழக்கிலும், பெரும்பான்மை சமூகத்தின் உறுப்பினர்கள் ஏனைய குழுவின் சட்டபூர்வமான உரிமையில் தலையிடாதிருக்கிறார்கள் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு மாறாக சிறுபான்மை சமூகமொன்றின் செயற்பாட்டினை இடைநிறுத்துவதனூடாக சமாதானக் குலைவினைத் தடுப்பதற்கான தீர்மானம் நிலைநிறுத்தப்பட்டது. 

இப்போக்கு இலங்கையின் கீழ்நிலை நீதிமன்றங்களிலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. M. Shelton Jayaweera v Manchanayake Kalum Nishantha and Others என்ற வழக்கில், மேல் நீதிமன்றமானது பிரதிவாதி-மனுதாரரின் சபை ஒன்றுகூடுதலானது அப்பிரதேசத்தில் இடையூறு விளைவிக்கின்றது என்ற அடிப்படையில் அதனைத் தற்காலிகமாக இடைநிறுத்துகின்ற நீதவான் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நிலைநிறுத்தியது. அத்துடன், ஏனையோருக்கு இடையூறு விளைவிக்கின்றவகையில் பிரதிவாதி-மனுதாரரின் அடிப்படை உரிமைகள் பிரயோகிக்கப்படலாகாது என கூறியது. பிரச்சினைக்குரிய இடைக்கால ஆணையானது பிரதிவாதி-மனுதாரரின் மதச் சுதந்திரத்தினைத் தடுப்பதனை இலக்காகக் கொள்ளவில்லை- மாறாக ‘நெருக்கடியான சூழ்நிலையொன்றினைத்’ தவிர்ப்பதனை இலக்காகக் கொண்டது என நீதிமன்றம் குறிப்பிட்டது. சுவாரஸ்யமிக்கவகையில், நீதிமன்றத்தினால் குறிப்பிட்டு காட்டபட்ட அந் ‘நெருக்கடியான சூழலானது’ நேரடியாக பிரதிவாதி-மனுதாரரின் நடத்தையினால் உருவாக்கப்படவில்லை, ஆனால் அந்நடத்தைக்கான ஏனையோரின் பதில்விளைவினால் உருவாக்கப்பட்டது. 

Badalgama Vipulasiri Thero and Others v Kuppuswamy Wijayan and Nadkunam Manogaran என்ற வழக்கில், உள்ளூர் பௌத்த பிக்கு ஒருவர் உள்ளடங்கலாக பிரதேசவாசிகள் தேவலாயமொன்றினால் பொது இடையூறு ஏற்படுவதாக முறைப்பாடு செய்தனர். நீதிமன்றமானது குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 104(1) இன் கீழ் குறித்த தேவாலயத்தின் செயற்பாடுகள் உரத்த ஒலி எழுப்புவதுடன், அது அப்பிரதேசத்தில் ஓலி மாசடைவு ஏற்பட காரணமாக அமைகின்றது என்ற அடிப்படையில், விசாரணை நிலுவையிலிருக்கின்றபோதே, எந்தவொரு தேவாலய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படக்கூடாது என தேவாலயத்திற்கு எதிராகத் தடையாணையினை வழங்கியது. அதற்கமைய, விசாரணை நிலுவையிலுள்ளபோது வழங்கப்படுகின்ற ஆணையானது கிறிஸ்தவ குடும்ப சபைக்கு எதிராக வழங்கப்பட்டதுடன் அவ் ஆணை தேவாலய நடவடிக்கைகளைத் தடை செய்தது. 

உரிமைகள் மீதான மட்டுப்பாடுகளுக்கான கட்டளைவிதி

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினை- குறிப்பாக சிறுபான்மை குழுக்களின் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினை மதிக்கின்ற மாறுபட்ட அணுகுமுறையொன்று- சிலசமயங்களில் உறுதியான பொது உணர்வுமிக்க விடயங்கள் தொடர்பாக கூட- பின்பற்றப்பட்டுள்ளமைக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் Bijoe Emmanuel and Others Vs State of Kerala and Others என்ற வழக்கு தீர்ப்பு சான்று பகர்கின்றது. இவ்வழக்கில், யெகோவாவின் சாட்சிகள் நம்பிக்கையினைக் கொண்டிருக்கின்ற மேன்முறையீட்டாளரின் மூன்று பிள்ளைகளும் இந்திய தேசிய கீதத்தினைப் பாட மறுத்தமையினால் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டனர். தேசிய கீதத்தினைப் பாடுதலானது தமது மத நம்பிக்கை கோட்பாடுகளுக்கு எதிரானது என அவர்கள் கூறினார்கள். நீதிமன்றமானது இந்நீக்கம் அவர்களின் மனசாட்சிக்கான சுதந்திரம் மற்றும் தமது மதத்தினை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான மற்றும் பரப்புரை செய்வதற்கான சுதந்திரத்தினை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்தது. மேலும் நீதிமன்றமானது, 

‘உறுப்புரை 25(1) ஆனது அதனில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் மற்றும் பகுதி ஐஐஐ இன் ஏனைய ஏற்பாடுகளுக்கும் அமைவானவை என வெளிப்படையாகக் கூறுகின்றது, மறுபுறம், மத நடைமுறையுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கக்கூடிய ஏதேனும் பொருளாதார, நிதி, அரசியல் அல்லது ஏதேனும் மதசார்பற்ற செயற்பாடொன்றினை ஒழுங்குபடுத்துவதற்கான அல்லது மட்டுப்படுத்துவதற்கான அல்லது சமூக நலன் மற்றும் திருத்தத்திற்கான சட்டமொன்றினை ஆக்குவதற்கான- அவ் ஒழுங்குவிதி, மட்டுப்பாடு அல்லது ஏற்பாடு உறுப்புரை 25(1) இல் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமையினைப் பாதிக்கின்றபோதிலும் கூட- சுதந்திரம் அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மனசாட்சிக்கான சுதந்திரம் மற்றும் தமது மதத்தினை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான மற்றும் பரப்புரை செய்வதற்கான சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமை வேண்டப்படுகின்றபோது, அவ் அடிப்படை உரிமையினை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்ற செயலானது பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரத்தினைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரு செயலா, அச்செயல் அரசியலமைப்பின் பகுதி ஐஐஐ இன் ஏற்பாடுகளுக்கு வலுவளிப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரு செயலா அல்லது மத நடைமுறையுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கக்கூடிய ஏதேனும் பொருளாதார, நிதி, அரசியல் அல்லது ஏதேனும் மதசார்பற்ற செயற்பாடொன்றினை ஒழுங்குபடுத்துவதற்காக அல்லது மட்டுப்படுத்துவதற்காக அல்லது சமூக நலன் மற்றும் திருத்தத்திற்காக ஆக்கப்பட்ட சட்டமொன்றினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள செயலா என்பது ஆராயப்பட வேண்டும்.’

மேலும் இந்திய உச்ச நீதிமன்றமானது, ‘இங்கு கேள்வியாக எழுவது குறித்த ஒரு மத நம்பிக்கை அல்லது நடைமுறை எமது நியாயம் அல்லது உணர்வுகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்பது அல்ல, ஆனால், குறித்த நம்பிக்கை மதமொன்றின் நம்பிக்கையின் அல்லது நடைமுறையின் பகுதியொன்றாக உண்மையாக மற்றும் மனசாட்சிப்படி நிலவி வந்துள்ளதா என்பதே ஆகும். தனிப்பட்டக் கருத்துக்கள் மற்றும் பதில்விளைவுகள் அவசியமற்றவை ஆகும். குறித்த நம்பிக்கையானது நேர்மையாக மற்றும் மனசாட்சிப்படியாக நிலவி வந்துள்ளதாயின், அது உறுப்புரை 25 இன் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்கின்றது, எவ்வாறெனினும், இப்பாதுகாப்பானது சந்தேகத்திற்கிடமற்றரீதியில் அதில உள்ளடக்கப்பட்டுள்ள தடைகளுக்கு அமைவானதாகும்’ என கூறியது. 

மதக் குழுக்களின் நடவடிக்கைகள் ‘பொது இடையூறு’ என்பதனை உள்ளடக்கியிருக்கின்ற சந்தர்ப்பங்களில், அவற்றை அகவய மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டே கருத்திற் கொள்ள வேண்டுமென்பதுடன், அவை ஏனையோரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீறுகின்றன என நியாயமாகக் கருத முடியுமா என்பதனை மதிப்பிட வேண்டும். 

உதாரணமாக, Church of God (Full Gospel) in India v K.K.R.M.C Welfare Association என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றமானது, “சத்தமானது மத நடவடிக்கைகளினால் உருவாக்கப்படுகின்றபோதும் அது ஒலி மாசடைவை ஏற்படுத்துமாயின் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டிகளை வழங்கலாம்” என கூறியது. நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்திருந்தது:

“இம்மேன்முறையீட்டில் எழுந்துள்ள வினாக்கள் யாவையெனில்: பல மதக் குழுக்கள் மற்றும் பல்வேறுபட்ட சமுதாயங்கள் அல்லது குழுக்கள் வாழ்கின்ற நாடொன்றில், குறிப்பிட்டவொரு சமுதாயம் அல்லது குழுவொன்று மதத்தின் அடிப்படையில் ஒலி மாசடைவை ஏற்படுத்தும் உரிமையினைக் கோர முடியுமா? தவில்களை அடித்தல் அல்லது ஒலிவாங்கிகள் மற்றும் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தி பிரார்த்தனைகளை சொல்லுதலினூடாக அயலவர்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்க முடியுமா? என்பனவாகும். எந்தவொரு மதமும் ஏனையோரின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றோ அல்லது அப்பிரார்த்தனைகள் ஒலிபெருக்கிகளினூடாக அல்லது தவில்களை அடிப்பதனூடாகச் செய்யப்பட வேண்டுமென்றோ தேவைப்படுத்தவில்லை என்பது முரண்பாடுகளற்ற விடயமொன்றாகும். எங்களுடைய கருத்தின்படி, நாகரீகமயப்பட்ட சமூகமொன்றில், மதத்தின் பேரில் வயதான அல்லது பலவீனமான நபர்கள், மாணவர்கள் அல்லது சிறுவர்களின் தூக்கத்தினை அதிகாலைப் பொழுதுகளில் அல்லது பகல் நேரத்தில் தொந்தரவு செய்தல் அல்லது வேறு நபர்கள் தங்களுடைய செயற்பாடுகளைச் செய்வதில் இடையூறு செய்தல் என்பனவற்றை அனுமதிக்க முடியாது. அயலில் வசிக்கின்ற இளம் குழந்தைகளும் அமைதியான சூழலில் தூங்குவதற்கான அவர்களின் இயல்பான உரிமையினை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள் என்பதனை மறந்துவிடக் கூடாது. தனது பரீட்சைக்காகத் தயார்படுத்துகின்ற மாணவரொருவர் அயற்பகுதியிலிருந்து எவ்வித அநாவசியமான இடையூறுமின்றி படிப்பில் அவதானம் செலுத்துவதற்கு உரித்துடையவராவார். அதேபோல, வயதானவர்களும் பலவீனமான நபர்களும் தங்களுடைய ஓய்வு நேரத்தை உரத்த சத்தம் போன்ற எவ்வித ஒலி மாசடைவு தொடர்பான இடையூறுமின்றி நியாயமான அமைதியுடன் கழிப்பதற்கு உரித்துடையவர்கள் ஆவார். வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனநல பிரச்சினைகளைக் கொண்டுள்ளோர், அதேபோல, ஆறு வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்கள் சத்தத்திற்கான உயர் உணர்திறன் தன்மையினைக் கொண்டோர் ஆவார். அவர்களுடைய உரிமைகளும் மதிப்பளிக்கப்பட வேண்டியவையே…

இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 25(1) இனை உறுப்புரை 19(1)(அ) உடன் இணைத்து வாசிக்கின்றபோது வருகின்ற உண்மையான மற்றும் முறையான பொருட்கோடலின்படி, எந்தவொரு பிரஜையும் அவர் விரும்பாத அல்லது அவருக்கு தேவை;பபடாத ஒரு சத்தத்தினைக் கேட்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட முடியாது…ஒருவரது உரிமைகளின் துய்ப்பானது ஏனையோரின் உரிமைகள் துய்க்க்ப்படுவதற்கு ஒத்திசைவானதாக அமைதல் வேண்டும். தன்னார்வ ஒற்றுமையொன்றினைக் கொண்டு வருவது சாத்தியமாகாத சுதந்திரமான சமூகக் காரணிகள் உள்ள சூழலில், முரண்படுகின்ற அக்கறைகளுக்கிடையிலான சமநிலையினைச் சரியாகப் பேணுவதற்கு அரசு முன்வருதல் வேண்டும்.’

உரிமைகள் மீதான மட்டுப்பாடுகளுக்கான நெகிழ்வற்ற கட்டளைவிதிக்கான தேவையொன்று உள்ளமையானது- குறிப்பாக அவை ‘பொது ஒழுங்கு’ அல்லது ‘பொது சுகாதாரம் அல்லது ஒழுக்கங்கள்’ போன்ற சாத்தியமானளவு பரந்த அக்கறைகளைத் தழுவியனவாக அமைந்திருக்கின்றபோது- மேலே கலந்துரையாடப்பட்டுள்ளதைப் போன்ற அரசியல் எண்ணங்கள் அதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களிலிலிருந்து தெளிவாகப் புலப்படுகின்றது. மட்டுப்பாடொன்றின் அனுமதிக்கப்படக்கூடிய தன்மையினை மதிப்பிடுவதனைப் பணியாகக் கொண்டுள்ள நீதிமன்றங்கள் மற்றும் சமவாய நிறுவனங்கள் பெரும்பாலும் விகிதசமன் தொடர்பான சோதனையினைப் பயன்படுத்துகின்றன (Eweida and others v United Kingdom). விகிதசமனைத் தீர்மானிக்கின்ற கட்டளைவிதியின் பிரகாரம், மட்டுப்பாடொன்று: (1) சட்டத்தினால் குறித்துரைக்கப்பட்டிருக்க வேண்டும், (2) அது நெறிமுறைதன்மைமிக்க இலக்கொன்றினைப் பாதுகாப்பதாய் இருத்தல் வேண்டும், (3) அது ஜனநாயக சமூகமொன்றிற்கு அவசியமானதாய் இருத்தல் வேண்டும் என்பதுடன் (4) அது விகித சமமானதாக இருத்தல் வேண்டும், அதாவது, தொடர்புபட்ட திறத்தவருக்கு ஏற்படுத்தப்படுகின்ற ஊறினை அதனால் ஏற்படும் நன்மைகள் விஞ்சியிருத்தல் வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவானது பாரபட்சமின்மைக்கான கோட்பாடு போன்ற மேலதிக அளவீட்டு கூறுகளையும் பிரயோகித்துள்ளது (உதாரணம்: Sonia Yaker v France and Miriana Hebbadj v France). மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகளில் பிரயோகிக்கப்பட்டுள்ளதனைப் போன்ற அத்தகைய கட்டளைவிதிகள் மற்றும் தடைகளைப் பிரயோகித்தலானது மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாடுகள் சட்டரீதியாக நியாயப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றன என்பதுடன் வெறுமனே பெரும்பான்மையினரின் அக்கறைகளை மேம்படுத்துவதற்காக பிரயோகிக்கப்படவில்லை என்பதனை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாகும். 

பகிரங்க அதிகாரிகள் தங்களுடைய தீர்மானமெடுத்தல் செயன்முறையில் சமுதாயங்களுக்கிடையில் சுமூகமான உறவுநிலையினைப் பேணுதலை மிக முக்கியமான காரணியொன்றாகக் கருத வேண்டுமென்பது ஐயமற தெளிவான விடயமாகும். அதேநேரத்தில், அனைத்து நபர்களினதும் உரிமைகளை மதிக்க வேண்டியதும் இதற்கான ஒரு முன்தேவைப்பாடாகும் என்பதனை உணர்ந்து கொள்தலும் சம அளவில் முக்கியமானதாகும். இந்நாட்டின் வரலாறு மீண்டும் மீண்டும் காண்பித்துள்ளவகையில், பெரும்பான்மையினரைத் திருப்திபடுத்தும்பொருட்டு சிறுபான்மை குழுக்களின் உரிமைகளை மீறுவதற்கு அனுமதிக்கின்றமையானது நீண்ட கால பிரச்சினையொன்றுக்கான குறுகிய கால சிறந்த தீர்வாக அமையினும், அது நீண்ட காலத்திற்கு சமாதானத்தினை நிலைத்திருக்கச் செய்யாது. 

Tagged with: