September 26, 2022

மதச் சுதந்திரம் ‘பரப்புரைக்கான சுதந்திரத்தினை’ உள்ளடக்குமா? 

கிஹான் குணதிலக்க 

பரப்புரை என்பது மதம் அல்லது நம்பிக்கைக்கானப் பரப்பில் வாதங்களுக்கு உள்ளாகி வருகின்ற விடயமொன்றாகும். ‘வழிபாடு’, ‘அனுட்டிப்பு’, ‘நடைமுறை’ மற்றும் ‘போதனை’ ஊடாக ஒருவருடைய மதம் அல்லது நம்பிக்கையினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் சர்வதேச சட்டத்திலும் மற்றும் இலங்கையின் அரசியலமைப்பிலும் nதிளவாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், அப்பரந்தளவான சுதந்திரத்தினுள் ஒருவருடைய மதத்தினைப் பரப்புரைச் செய்வதற்கான சுதந்திரத்தின் உள்ளடக்கம் உயரளவில் சர்ச்சைக்குள்ளாகி வரும் விடயமொன்றாகும். இவ் எழுத்தாக்கமானது, இவ்விடயம் தொடர்பான சர்வதேச மற்றும் தேசிய சட்டத்தை விளக்குவதுடன் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பரப்பிற்குள் பரப்புரையினையும் உள்ளடக்குகின்றது. 

பரப்பு மற்றும் மட்டுப்பாடுகள்

இலங்கையில், ஒருவரின் மதத்தினைப் பரப்புரை செய்வது, அதாவது., சுவிஷேஷ பிரச்சாரம் அல்லது மதமாற்ற முயற்சிகள், மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பகுதியொன்றாகக் கருதப்படுவதில்லை. உச்ச நீதிமன்றத்தினால் அண்மையில் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புடைய வழக்கொன்றில் வழங்கப்பட்ட தீர்மானம் மற்றும் முந்தைய சட்டமூல தீர்மான வழக்குகள் என்பன இந்நிலைப்பாட்டினைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. நீதிமன்றமானது மதம் அல்லது நம்பிக்கையினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தின் ஒவ்வொரு அம்சத்தினையும் கருத்திற் கொண்டு, ஒருவருடைய மதத்தினைப் பரப்புரை செய்வதானது மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பரப்பின் பகுதியொன்றாகாது என தீர்மானித்தது. அது அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ) இல் குறிப்பிட்டுக்காட்டப்பட்டுள்ள ‘வழிபாடு’ அல்லது ‘அனுட்டிப்பு’ என்பவற்றுள் உள்ளடங்குகின்ற செயலொன்றாகப் பரப்புரையினைக் கருத முடியாதென கூறியது. மேலும், உறுப்புரை 14(1)(உ) இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘நடைமுறை’ ஆனது ‘மதமொன்றின் அல்லது நம்பிக்கைகளின் தொகுதியொன்றினை ‘வழிபடுகின்ற’ மற்றும் ‘அனுட்டிக்கின்ற’ போது அல்லது அவற்றுடன் தொடர்புடைய அல்லது அவற்றின் விளைவாகச் செய்யப்படுகின்ற வழக்காற்று அல்லது பாரம்பரிய சடங்கு, விழா அல்லது செயலை’ மாத்திரமே குறிக்கின்றது என பரிந்துரைத்தது. அத்துடன், ‘போதனை’ என்பது ‘அறிவுறுத்தல்கள், பாடங்கள் மற்றும் பயிற்சியினால் மாணவருக்கு அறிவு மற்றும் திறன்களை அளிக்கின்ற ஆசிரியரொருவரால் செய்யப்படுகின்ற மாணவர்களின் கல்விச் செயன்முறையொன்றினை’ உள்ளடக்கியிருக்க வேண்டுமென்றும், அத்துடன் அப்போதனையானது இணக்கமானதாயும் முன்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்டதாயும் இருக்க வேண்டுமென்றும் அது குறிப்பிட்டது. ஆகவே, வீடு வீடாகச் சென்று சுவிசே~ம் சொல்கின்ற யெகோவாவின் சாட்சிகளின் நடைமுறையானது மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பரப்பிற்கு அப்பாற்பட்டது என கருதப்பட்டதுடன் அது குறிப்பாக அரசியலமைப்பின்கீழ் பாதுகாக்கப்படவில்லை என்றும் கருதப்பட்டது.

அத்துடன், Menzingen வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மதம் அல்லது நம்பிக்கையினைப் பரப்புரை செய்வதற்கான சுதந்திரமானது அரசியலமைப்புரீதியாகப் பாதுகாக்கப்பட்ட உரிமையொன்றில்லை என கூறியிருந்தது. அவ்வழக்கில், ‘கத்தோலிக்க மதம் பற்றிய அறிவினைப்’ பரப்புதல் எனக் குறிப்பிடப்பட்ட நோக்கத்துடன் நிறுவனமொன்றினை கூட்டிணைப்பதற்கான தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புடன் ஏற்பாகின்ற தன்மை குறித்து நீதிமன்றம் மதிப்பீடு செய்தது. பௌத்த மதத்திற்கு ‘முதன்மை இடத்தினை’ உத்தரவாதப்படுத்துகின்ற அரசியலமைப்பின் உறுப்புரை 9 உடன் இச்சட்டமூலம் முரண்படுகின்றது என நீதிமன்றம் தீர்த்தது. உறுப்புரை 9 ஆனது ஏனைய மதங்களைச் சேர்ந்த தனிநபர்கள் தங்களுடைய மதத்திற்கு அப்பாலுள்ளவர்களுக்கு பொருள்சார் நன்மைகளை வழங்குவதனூடாகத் தங்களுடைய மதத்தினைப் ‘பரப்புரை செய்வதனை’ மட்டுப்படுத்துகின்றது என நீதிமன்றம் தீர்த்தது. ‘கிறிஸ்தவத்தின் பரப்புரை மற்றும் பரப்புதல் (பொருட்சார் நன்மைகளை அளிப்பதனூடாக) அனுமதிக்கப்பட முடியாதன, ஏனெனில், அது பௌத்தத்தின் அல்லது புத்த சாசனத்தின் இருப்பினைப் பாதிக்கக்கூடும்” என தீர்மானித்திருந்தது. 

உச்ச நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்நிலைப்பாட்டினை இரு கோணங்களில் விமர்சிக்க முடியும். முதலாவதாக, நீதிமன்றத்தின் நிலைப்பாடானது மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பில் காணப்படுகின்ற சர்வதேச சட்டக் கோட்பாட்டிற்கு அமைவானதாகக் காணப்படவில்லை. ஒருவருடைய மதம் பற்றிய வெளியீடுகளைப் பகிர்வதற்கான இயலுமையானது, பெரும்பாலும் மதம் அல்லது நம்பிக்கையினை வெளிப்படுத்துவதன் அடிப்படை அம்சமாகவே அமைகின்றது என்பதுடன் அது ‘போதனை’ என்ற பரப்பிற்கு கீழ் வருவதாயும் கருத இயலும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது உறுப்புரை 18 தொடர்பான (சிந்தனை, மனசாட்சி அல்லது மத சுதந்திரம்) தனது பொது கருத்துரை 22 இற்கு அமைய, நடைமுறை மற்றும் போதனை என்பன ‘மதப் பிரதிகள் அல்லது வெளியீடுகளைத் தயாரித்தல் மற்றும் பகிர்ந்தளிப்பதற்கான சுதந்திரத்தினை’ உள்ளடக்கும். ஆகவே, உதாரணமாக, மக்களிடம் செல்வதனூடாக அவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்குதலானது- பெரும்பாலும் பரப்புரையின் வடிவமொன்றாக அமைவது- மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பகுதியொன்றாகக் கருதப்படல் வேண்டும். எனினும், மதம் அல்லது நம்பிக்கையினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தின் எந்தவொரு அம்சத்தினையும் போன்று இவ் அம்சமும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 18(3) இற்கமைவான மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படலாம். 

ஆயின், மதப்பரப்புரைச் செயல் தொடர்பான நீதிமன்றத்தின் மதிப்பீடானது, மதப்பரப்புரையானது மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பரப்பிற்குள் உள்ளடங்குகின்றதா இல்லையா என்ற கேள்விக்கு மாறாக, குறித்த செயல் மட்டுப்படுத்தப்பட வேண்டுமா அல்லது கூடாதா என்ற கேள்வியாகவே அமைகின்றது. உண்மையில் மதப்பரப்புரைச் செயல்கள் ஏனையோரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் போன்ற சில பகிரங்க அக்கறையின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்படலாம். உதாரணமாக, மதப்பரப்புரையானது பலவந்தப்படுத்துவதாக அமையுமாயின், அது எவ்வித பலவந்தப்படுத்தலுமின்றி தனது சுய விருப்பின்பேரில் மதம் அல்லது நம்பிக்கையொன்றைத் தெரிவு செய்து கொள்வதற்கான ஏனைய நபரொருவரின் அக்கறைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுப்படுத்தப்படலாம். இத்தகைய பின்னணியில், உச்ச நீதிமன்றத்தின் கவனமானது குறித்த மதப்பரப்புரைச் செயல் இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 15(7) இன்கீழ் மட்டுப்படுத்தப்பட முடியுமா என்பதன் மீதே செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மாறாக, குறித்த செயல் உறுப்புரை 14(1)(உ) இன்கீழ் உத்தரவாதப்படுத்தபட்டுள்ள உரிமையின் பரப்பிற்குள் உள்ளடங்குமா என்பதன் மீதல்ல.

இரண்டாவதாக, மதப்பரப்புரை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடானது இலங்கை அரசியலமைப்பின் ஒத்திசைவான பொருட்கோடலை ஏற்றுக்கொள்வதாக அமையவில்லை. எவ்வாறெனினும், அரசியலமைப்பில் காணப்படுகின்ற வேறுபட்ட நியமங்களின் ஒத்திசைவுமிக்க வாசிப்பானது சாத்தியமானதே. உறுப்புரை 9 ஆனது பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டிய மற்றும் புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டிய மற்றும் வளர்க்க வேண்டிய கடப்பாட்டினை அரசின்மீது விதிக்கின்றது. இவ் உறுப்புரையின் நேரடி விளைவாக தங்களுடைய மதத்தினைப் பரப்புரைச் செய்வதற்கான பௌத்தர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. ஒரு மதத்திற்கு மாத்திரம் மேலான நடத்துகையினை அளித்தல் சந்தேகத்திற்கிடமற்றரீதியில் பிரச்சினைக்குரியதே; ஆனால் அது இலங்கை அரசியலமைப்பின் மறுக்கமுடியாத அம்சமொன்றாகியுள்ளது. வெளியீடுகளைப் பகிர்ந்தளித்தலுக்கான இயலுமை போன்ற பரப்புரைச் செய்வதற்கான சுதந்திரத்தினை உறுப்புரை 14(1)(உ) இன் பரப்பிலிருந்து புறந்தள்ளுதலானது,  பௌத்தத்தினைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் வளர்க்க வேண்டும் என்ற கடப்பாட்டினை அரசிற்கு விதிப்பதனூடாக பௌத்த மதத்திற்கு மாத்திரம் நன்மை பயக்கின்ற உறுப்புரை 9 இனால் ஏற்கனவே வலுப்படுத்தப்பட்டிருக்கின்ற சமத்துவமின்மையினை மேலும் விரிவாக்கும்.  

இவ்வெளிப்படையான சமத்துவமின்மையினை குறைப்பதற்கான ஒரு வழிமுறை யாதெனில் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்கள் தங்களது சுய முன்னெடுப்புக்களின்பேரில் தமது மதங்களை வளர்ப்பதற்கான சுதந்திரத்தினை அங்கீகரித்தலாகும். எவ்வாறெனினும், உறுப்புரை 9 இனைக் கருத்திற்கொண்டு பார்க்கின்றபோது, அத்தகைய அங்கீகாரமானது அனைத்து மதக் குழுக்களுக்கும் மொத்த சமத்துவத்தினை வழங்காது, எனினும் அது குறைந்தபட்சம் சமத்துவமின்மையின் பரப்பினை குறுகலாக்கும். அத்தகையதொரு பொருட்கோடலானது, ‘அரசியலமைப்பின் உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) இல் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் ‘ஏனைய மதங்களுக்கும்’ கிடைக்கின்றன என்பதனை உறுதிப்படுத்தக் கூடிய விதத்திலேயே உறுப்புரை 9 இல் சொல்லப்பட்டுள்ள அரசின் கடப்பாடு நிறைவேற்றப்பட வேண்டுமென’ குறிப்பிடுகின்ற, அவ் உறுப்புரையிலேயே உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைக்கு அமைவானது ஆகும். குறைந்தபட்சமாக, மதப்பரப்புரையானது உறுப்புரை 14(1)(உ) இன் பகுதியொன்றாக அங்கீகரிக்கப்படின், அரசானது புத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஏனைய மதக் குழுக்கள் தங்களுடைய மதங்கள் தொடர்பாக அரச ஆதரவின்றி தாமாகவேனும் பரப்புரைச் செய்வதற்கான சுதந்திரத்தினை மதிக்கவேண்டிய கடப்பாட்டினைக் கொண்டிருக்கும். 

சிந்தனைகளுக்கான களம்

மதப்பரப்புரைக்கான சுதந்திரத்தினை மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பரப்பிலிருந்து விலக்களிக்கின்றபோது முரண்பாடொன்று தோன்றுகின்றது. மறுபுறம், மதம் சமூகத்தில் ஒரு விசேட அந்தஸ்த்தினைப் பெற்றுள்ளதுடன், பெரும்பாலும் அது ஏனைய சித்தாந்தங்கள் அல்லது நம்பிக்கைகளைக் காட்டிலும் மிக முக்கியமானதொன்றாகவே நடத்தப்படுகின்றது. உதாரணமாக, மதத்தினை விமர்சிப்பது தொடர்பாக அல்லது இழிவுபடுத்துவது தொடர்பாக உயரிய உணர்தன்மை காணப்படுகின்றது. இவ் உணர்தன்மையானது ‘மத உணர்வுகளை ஊறுபடுத்தல்’ என அறியப்படுகின்ற இலங்கையின் தண்டனைக் கோவையிலுள்ள சில குற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மறுபுறத்தில், சிந்தனைக் களத்திலே அரசியல் கலந்துரையாடல்கள் அல்லது பொருளியல் கலந்துரையாடல்களைக் காட்டிலும் மதத்திற்கு குறைந்தளவான பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. ஆக, அத்தகைய விசேட அந்தஸ்த்தானது நன்கு ஸ்தாபிக்கப்பட்ட அல்லது பழமைசார் மதங்களால் மாத்திரமே அடைந்து கொள்ளப்படக்கூடியது என்பது மிகத் தெளிவாகத் தெரிய வருகின்றது. ஆகவே, மதப்பரப்புரை தொடர்பான தற்போதைய அணுகுமுறையானது உள்ளார்ந்தமாக ஸ்தாபிக்கப்பட்டவைகளுக்கு ஆதரவானவையாகவே காணப்படுகின்றன. 

அரசியல் பரப்பில் அரசியல் கட்சிகள் பொதுவாகத் தங்களுடைய செய்திகளைப் பரப்புரை செய்வதற்கு, குறிப்பாக தேர்தல் காலப்பகுதியில் இதனைச் செய்வதற்கு, அனுமதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பரப்புரையானது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான உரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் உள்ளடங்கலான அரசியல் சுதந்திரத்தின் பகுதியொன்றாகக் கருதப்படுவதுடன் அது வாக்களிப்பதற்கான உரிமையுடனும் தொடர்புற்றுள்ளது. பொருளியல் பரப்பில், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் பொதுவாக அவர்களது பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ் இயலுமையானது போட்டிமிக்க சந்தை செயற்பாட்டின் மையப் பகுதியாகக் கருதப்படுகின்றது. 

மாற்று செய்தியொன்றினைப் பரப்புரை செய்வதனூடாகப் பெரிய மற்றும் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட அரசியற் கட்சிகளை எதிர்க்கின்ற சுதந்திரத்தினை சிறிய, புதிய அரசியல் கட்சியொன்றிற்கு மறுப்பதற்கு அப்பெரிய கட்சிகளை அனுமதிக்கின்றமையானது அரசியல் சுதந்திரத்திற்கு விரோதமானதாக அமையும். அரசியற் போட்டித் தன்மையானது உயரிய அளவில் தீவிரமானதான அல்லது வன்முறைமிக்கதாக உள்ளபோது கூட, சமூகங்கள் அரசியல் போட்டித் தன்மையினை ஏற்றுக் கொண்டுள்ளன. அதேவேளை, சந்தைப் பொருளாதாரத்தில் பெரிய வியாபாரமொன்று சந்தைக்கான ஏகாதிபத்தியத்தைக் கொண்டிருப்பதற்கு அனுமதிக்கின்றமையினையும் புதிய உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் விளம்பரம் செய்யாமல் தடுக்கின்றமையினையினையும் எண்ணியும் பார்க்க இயலாது.

ஆகவே, அரசியல் மற்றும் பொருளியல் பரப்புக்களில், பரப்புரை என்பது துடிப்பான சந்தையின் ஆரோக்கியமான காரணியொன்றாகக் கருதப்படுகின்றது. எனினும், தங்களுடைய செய்திகளை ஏனையோருக்கு பகிர்ந்து கொண்டு தமது மதத்தினை ஏற்றுக் கொள்வதற்கு ஏனையோரை ஊக்குவிக்க விரும்புகின்ற மதக் குழுக்களுக்கு அத்தகைய பரப்புரைக்கான சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. 

மதமொன்றினைப் பரப்புரைச் செய்வதற்கான சுதந்திரமானது நடைமுறை நிலைமைக்கு ஆதரவானதாகவே இருப்பதோடு ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள மதக் குழுக்களின் அக்கறைகளையே பாதுகாக்கின்றது. இத்தகைய பின்னணியில், பரப்புரைக்கான சுதந்திரமானது மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பரப்பிற்கு அப்பாற்பட்டது என்ற கருத்தேற்பானது, இயற்கையாகவே தங்களை மதச் சந்தைக்குள் நிலைநிறுத்திக் கொள்வதற்காகப் பரப்புரை செய்ய வேண்டிய தேவையினைக் கொண்டிருக்கின்ற பழமைசாராத அல்லது புதிய மதக் குழுக்களை சகித்துக்கொள்ள முடியாதத் தன்மையினையே வெளிப்படுத்துகின்றது. 

ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனைத்து மதங்களும் ஏதோ ஒரு தருணத்தில் நடைமுறை நிலைமைக்கு சவாலானவையாக அமைந்திருக்கும் என்பதனை நாம் நினைவிற் கொள்தல் வேண்டும். பௌத்தமானது இந்து மதத்தை சவாலுக்குட்படுத்தியது, கிறிஸ்தவம் றோமன் கத்தோலிக்கத்தையும் யூத மதத்தையும் சவாலுக்குட்படுத்தியது மற்றும் புரட்டஸ்தாந்து கத்தோலிக்கத்தையும் சவாலுக்குட்படுத்தியது. அனைத்து மத சிந்தனைகளும் போட்டித்தன்மை மற்றும் போட்டியினூடாகவே வெளிவந்துள்ளன. ஆகவே, மதங்கள் சிந்தனைக் களத்தின் பகுதியே ஆகும். பெரும்பாலும் அவை ஏனைய சித்தாந்தங்கள் மற்றும் சிந்தனை முறைகளுக்கு மேலான விசேடமான இடமொன்றினைப் பெறுவதற்கு உரியன அல்ல. எனினும், போட்டிக்குரிய சிந்தனைகளை நாம் சகிக்கின்ற மற்றும் வரவேற்கின்ற ஏனைய பரப்புக்களில் நாம் அங்கீகரித்திருக்கின்ற அடிப்படை சுதந்திரங்களை மதங்களைப் பின்பற்றுபவர்கள் தொடர்பில் நாம் மறுக்கக்கூடாது. 

முடிவு

மதப்பரப்புரைக்கான சுதந்திரம் என்பது நெறிமுறைதன்மைமிக்க மட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதனால் அது முழுமையான சுதந்திரமொன்றல்ல. ஆனால், எவ்வித சந்தேகங்களுமின்றி அது மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் பகுதி மற்றும் பாகமொன்றாகும். மதப் பரப்புரையினை மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்தரத்தின் பரப்பிற்கு அப்பால் வைத்தலானது கருத்தேற்புரீதியாக பிரச்சினைக்குரியதோடு மாத்திரமல்லாமல் அது மதப் பரப்பின் வளர்ச்சி மற்றும் பரிணாமத்திற்கும் ஊறினை ஏற்படுத்தும். மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரமானது நன்கு ஸ்தாபிக்கப்பட்ட அல்லது பழமையான மதக் குழுக்களுக்காக மட்டுமானதாக இருக்க முடியாது. உண்மையில், சிறிய, பழமைசாராத மதக் குழுக்களுக்கே மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் அதிகமாகத் தேவைப்படும், மதப்பரப்புரைக்கான அவர்களது சுதந்திரம் நிச்சயமாக மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மையப்பகுதியொன்றாக எஞ்சியிருக்கும். 

Tagged with: