குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 81 மற்றும் அமைதியினைக் குலைத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள். பொலிஸ் அறிக்கை மற்றும் பிணைப்புக்களை வழங்குவதற்காக நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
MC22587
2019 பெப்ரவரி 24 ஆம் திகதி, அண்ணளவாக முற்பகல் 09.15 அளவில் பெண் போதகர் ஒருவரும் அவரது விசுவாசிகளும் ஞாயிறு வழிபாட்டு சேவைகளுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 04 பௌத்த பிக்குகளினால் தலைமை தாங்கப்பட்ட 200 தனிநபர்களைக் கொண்ட குழுவொன்று தேவாலய வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததுடன் உடனடியாக வழிபாட்டு நடவடிக்கைகளை நிறுத்துமாறு போதகரிடம் கோரியது. அவர்கள் விசுவாசிகளை ஆபாச மொழியினால் அச்சுறுத்தியதுடன், கதிரைகளை உடைத்து கூரைத் தகடுகளையும் சேதப்படுத்தினர். வழிபாட்டு நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் அக்கிறிஸ்தவர்களைக் கொல்வதாக பௌத்த பிக்கு ஒருவர் அச்சுறுத்தினார். அவர்கள் வெளியேறுகின்றபோது, கும்பலின் சில உறுப்பினர்கள் பெண் விசுவாசி ஒருவரை பிடித்து தெருவிற்கு இழுத்து அவரை பௌத்த பிக்குவின் காலடியில் தள்ளி அடிக்க ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் உடனடியாகக் கலைந்து சென்றனர். மற்றுமொரு விசுவாசி பொலிஸ் உடனடி அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டதன் விளைவாக மீகலேவ பொலிஸ் நிலையத்திலிருந்து 05 பொலிஸ் அதிகாரிகள் சுமார் முற்பகல் 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போதகரிடமிருந்து வாக்குமூலமொன்றினைப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் போதகர், போதகரின் கணவர், மற்றும் தாக்குதலுக்குள்ளான விசுவாசி ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கிறிஸ்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பதாக அங்கு சென்ற பௌத்த பிக்குகள் போதகர் அமைதியினை குலைப்பதாக முறைப்பாடு செய்தனர். போதகர் சம்பவம் தொடர்பான தனது சொந்த முறைப்பாட்டினைப் பதிவு செய்தார் (CIB (1) 107/282).
பௌத்த பிக்குக்களினால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கான விசாரணையொன்றிற்காக 2019 பெப்ரவரி 25 ஆம் திகதி சுமார் முற்பகல் 11 மணியளவில் போதகர், அவரது கணவர் மற்றும் வேறொரு விசுவாசி ஆகியோர் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தனர். 2 பௌத்த பிக்குகளும் சுமார் 10 பிரதேசவாசிகளும் விசாரணையில் பிரசன்னமாயிருந்தனர், எவ்வாறெனினும், பொலிஸ் நிலையத்திற்கு வெளியே சுமார் 300 தனிநபர்கள் குழுமியிருந்தனர். போதகர் தனது வழிபாட்டு சேவைகளை நிறுத்திவிட்டு அவரது தனிப்பட்ட வழிபாட்டு அனுட்டானங்களை மட்டும் தொடர வேண்டுமென பௌத்த பிக்குகள் வேண்டுகோள் விடுத்தனர். பிரதேசவாசிகளும் இக்கோரிக்கையினையே முன்வைத்தனர். பௌத்த பிக்குகளின் வேண்டுகோளுக்கு இணங்குமாறும் பொலிஸ் இனி மேலதிக பாதுகாப்பு தர மாட்டாது எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போதகரிடம் தெரிவித்தார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவ்விடயயத்தை திறத்தவர்களிடையே பேசி இணக்கத்திற்கு கொண்டுவர முயன்றபோதும் போதகர் இதனை நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்துமாறு வலியுறுத்தினார் (வழக்கு இலக்கம் 22587). தாக்குதலுக்குள்ளான விசுவாசி தனியான முறைப்பாடொன்றினை செய்திருந்தார். அவர் மீகலேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரவிலுள்ள போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு 2 நாட்கள் வைத்தியசாலையில் இருந்தார். அவர் சார்பாக கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் B 211 என்ற இலக்கத்தின் கீழ் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.